மதுரை-தேனி இடையே ரெயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் உற்சாக பயணம் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்


மதுரை-தேனி இடையே ரெயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் உற்சாக பயணம் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்
x

மதுரை-தேனி இடையே 11 ஆண்டுகளுக்கு பிறகு ரெயிலில் பயணம் செய்த மக்கள் மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தனர்.

தேனி

ரெயில் சேவை

மதுரை-போடி இடையே 90 கிலோமீட்டர் தூரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இதை அகல ரெயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகள் முடங்கிக் கிடந்த பணிகள் சில ஆண்டுகளாக தீவிரம் அடைந்தன. இதில், மதுரையில் இருந்து தேனி வரை 75 கிலோமீட்டர் தூரத்துக்கு ரெயில்பாதை பணிகள் நிறைவு பெற்றன. தேனியில் இருந்து போடி வரையிலான பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து மதுரை-தேனி இடையிலான ரெயில் சேவையை பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்றபடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். அந்த ரெயில் நேற்று இரவில் தேனிக்கு வந்தது. மக்களின் உற்சாக வரவேற்பை தொடர்ந்து அந்த ரெயில் மதுரைக்கு திரும்பி சென்றது.

உற்சாக வரவேற்பு

இந்த ரெயில் பாதையில் முன்பதிவு இல்லாத பயணிகள் சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டதால், அதில் பயணம் செய்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதற்காக தேனியில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் மதுரை ரெயில் நிலையத்தில் மக்கள் குவிந்தனர். அங்கிருந்தும், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரெயில் நிலையங்களில் இருந்தும் இந்த ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிகள் ஏறினர். மதுரையில் இருந்து காலை 8.30 மணியளவில் இந்த ரெயில் தேனி நோக்கி புறப்பட்டது.

வரும் வழியில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரெயில் நிலையங்களில் ஏராளமான மக்கள் ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேனி ரெயில் நிலையத்திலும் ரெயிலை வரவேற்க மக்கள் பலர் குடும்பத்துடன் குவிந்தனர்.

இந்த ரெயில் காலை 9.35 மணிக்கு தேனிக்கு வர வேண்டும். ஆனால் மக்களின் உற்சாக வரவேற்பு காரணமாக 35 நிமிடங்கள் தாமதமாக காலை 10.10 மணிக்கு தேனிக்கு வந்தது. தேனி ரெயில் நிலையத்துக்குள் ரெயில் நுழைந்த போது விசில் அடித்தும், கரகோஷம் எழுப்பியும் வரவேற்பு அளித்தனர்.

கடைசி மற்றும் முதல் பயணம்

ரெயிலில் மலரும் நினைவுகளுடன் பலர் பயணம் செய்தனர். அவர்கள் ரெயில் பயணத்தின் போது புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ரெயில் நிலையத்தில் ரெயிலோடு புகைப்படம் எடுத்து கொள்வதிலும் மக்கள் ஆர்வம் காட்டினர்.

11 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் இயக்கப்பட்ட நிலையில், முதல் நாள் பயண அனுபவம் குறித்து பயணிகளிடம் கேட்டபோது நெகிழ்ச்சியாக தங்களின் கருத்துக்களை கூறினர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

பாலாஜி (தேனி) :- நான் 5 வயது சிறுவனாக இருந்த போது இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு இந்த ரெயிலின் கடைசி பயணத்தில் எனது தாத்தாவுடன் மதுரை வரை சென்றேன். அந்த டிக்கெட் இன்றும் பத்திரமாக வைத்துள்ளேன். 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் ரெயில் சேவை தொடங்கும் போதும் ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று அதிகாலையிலேயே மதுரை ரெயில் நிலையத்துக்கு சென்று விட்டேன். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தேனி வந்தேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சிவக்குமார் (மதுரை) :- தான் ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கிறேன். தினமும் பஸ்சில் ரூ.60-க்கு டிக்கெட் எடுத்து தேனிக்கு வந்து சென்றேன். ரெயிலில் ரூ.45 தான் டிக்கெட் கட்டணம். குகைபோல் உள்ள கணவாய் மலைப்பகுதியில் ரெயில் வந்த போது புதுவித அனுபவமாக இருந்தது. இது மறக்க முடியாத ரெயில் பயணம்.

மறக்க முடியாத நாள்

ஆர்த்தி (தேனி):- ரெயில் பாதை அருகில் தான் எங்கள் வீடு உள்ளது. சிறு வயதில் தினமும் ரெயிலை பார்ப்போம். பல ஆண்டுகளாக தேனியில் ரெயிலை பார்க்க முடியாத ஏக்கம் இருந்தது. முதல் நாளில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக குடும்பத்துடன் அதிகாலையில் மதுரை சென்று விட்டோம். அங்கிருந்து பயணம் செய்து வந்தது நெகிழ்ச்சியான அனுபவமாக உள்ளது.

ராதா (மதுரை) :- நான் பிறந்து வளர்ந்தது, போடி துரைராஜபுரத்தில் தான். மதுரையில் இருந்து தாயார் வீட்டுக்கு இந்த ரெயிலில் தான் வந்து செல்வேன். 11 ஆண்டுகளுக்கும் மேலாக ரெயிலை இயக்காததால் மிகவும் வருத்தமாக இருந்தது. மீண்டும் ரெயில் இயக்கப்படுவதை அறிந்து முதல் நாள் முதல் பயணத்திலேயே தேனிக்கு வந்தோம். வரும் வழியில் மலரும் நினைவுகளை அசைபோட்டபடி வந்தேன். இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. போடி வரையிலான பணிகளை விரைந்து முடித்து, சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கும் ரெயில் இயக்க வேண்டும். இந்த ரெயிலில் மருத்துவ குழுவினரும் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு பயணிகள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

=============

இன்சைடு பாக்ஸ்

===============

361 பயணிகள், ரூ.21,750 வருவாய்

மதுரையில் இருந்து தேனிக்கு இன்றுகாலை 12 பெட்டிகளுடன் வந்த முதல் ரெயிலில் மொத்தம் 361 பயணிகள் பயணம் செய்தனர். இதனால், ரெயில்வே துறைக்கு டிக்கெட் மூலம் ரூ.21 ஆயிரத்து 750 வருவாய் கிடைத்தது. மதுரையில் இருந்து 153 பயணிகளும், வடபழஞ்சியில் 34 பயணிகளும், உசிலம்பட்டியில் 109 பயணிகளும், ஆண்டிப்பட்டியில் 65 பயணிகளும் டிக்கெட் எடுத்து தேனிக்கு பயணம் செய்தனர்.

-------

ரெயில் நிலையத்துக்கு பஸ் சேவை

தேனிக்கு ரெயில் சேவை தொடங்கியதை தொடர்ந்து தேனி ரெயில் நிலையத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் சேவை இன்று தொடங்கியது. ரெயில் வரும் காலை நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வழியாக கர்னர் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.


Next Story