வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல்


வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல்
x

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நடுவில் நிறுத்தப்பட்டன.

திருப்பத்தூர்

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே நடுவில் நிறுத்தப்பட்டன.

தண்டவாளத்தில் விரிசல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் ரயில்வே கேட் பகுதியில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பணிபுரியும் ரெயில்வே ஊழியர் கணேஷ் ராஜ் என்பவர் தண்டாவள கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது வாணியம்பாடி நியுடவுன் ரயில்வே கேட் பகுதியில் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் அதிக சத்தம் கேட்டது. இதனால் ரெயில்வே ஊழியர் சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்த போது தண்டவாளத்தில் சுமார் 1 அடி அளவில் விரிசல் இருப்பதை கண்டறிந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து வாணியம்பாடி ரெயில் நிலைய மேலாளர் சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அதிகாரிகள், ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

ரெயில்கள் நிறுத்தம்

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக நேற்று காலை 6.10 மணியளவில் சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்ட கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதேபோன்று சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக பெங்களூரு செல்லும் பிருந்தவான் எக்ஸ்பிரஸ் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திலும், டபுள்டக்கர் ெரயில் விண்ணமங்கலம் ெரயில் நிலையத்திலும் மற்றும் சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி ரெயில்வே ஊழியர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது. இதனையடுத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.


Next Story