ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு எதிரொலி: கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்
சட்டசபை முடிந்த கணமே காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை,
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடி பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கும்பகோணத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, தமிழக சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென அவையில் இருந்து வெளியேறினார்கள்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வெளியேறிய அவர்கள் தலைமை செயலகம் எதிரே உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், விஜயதாரணி உள்ளிட்டவர்கள் நெற்றியில் கருப்பு துணி அணிந்து சிறிது நேரம் மறியலில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் மறியலால் தலைமை செயலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.