ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ராகு-கேது பெயர்ச்சி
திருக்கணிதம் பஞ்சாங்கத்தில் நேற்று ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் 3.40 மணியளவில் ராகு பகவான் மேஷம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர். பொதுவாக ராகு-கேது பெயர்ச்சியாகும் நாட்களில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி மதியம் 3.30 மணியளவில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை மற்றும் நவக்கிரகத்துக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.
வேள்வி பூஜை
அதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் ராகு-கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திண்டுக்கல் ரவுண்டு ரோடு வல்லப கணபதி கோவிலில் காலையில் யாக பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் -திருச்சி ரோடு கே.ஆர்.நகரில் உள்ள ஸ்ரீரூப கிருஷ்ணன் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி யாக வேள்வி பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராகு-கேது வீற்றிருந்தனர்.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் யாக பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பெயர்ச்சியையொட்டி ராகு-கேது பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.