எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்
எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 6 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கீழ்பள்ளிபட்டில் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் லட்சுமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் விஜயபாஸ்கர், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி அருள், வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் உமா, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மண்டல துணை தாசில்தார் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா வரவேற்றார்.
இதில் 194 காளைகள் பங்கேற்றன. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்து சாலையின் நடுவே மண் கொட்டப்பட்டிருந்தது. காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறி பாய்ந்தது ஓடின. காளைகளை இளைஞர்கள் ஆரவாரம் செய்து ரசித்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.40 ஆயிரம் என மொத்தம் 46 பரிசுகள் வழங்கப்பட்டது.