அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்ப திருவிழா நடந்தது.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிறைவு நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் காலை தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் வீதி உலா வருதல், மாலையில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடந்தது. மண்டகப்படிதாரர்களான இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் அவர்களது தெருவில் உள்ள பாலசந்திர விநாயகர் கோவிலில் 6 மணி அளவில் அம்மையப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அம்மையப்பர் எழுந்தருளினார். சப்பரம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவு 9 மணிக்கு கோவிலை வந்தடைந்து. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் சுவாமி எழுந்தருளி நீராளி மண்டபத்தை 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நிகழ்ச்சியில் எஸ்.தங்கப்பழம் கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன் மற்றும் குடும்பத்தினர்கள், கோவில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, வாசுதேவநல்லூர் நகரப் பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைவர் கு.தவமணி, நாடார் உறவின்முறை சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்களான உபயதாரர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தெப்ப திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் தக்கார் முருகன் தலைமையில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி செய்திருந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் போலீசாரும், வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழு நிலைய அலுவலர் கருப்பையா தலைமையில் தீயணைப்பு படையினரும் செய்திருந்தனர்.