தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.11 லட்சம் கொள்ளை


தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.11 லட்சம் கொள்ளை
x

தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சிவகங்கை

காரைக்குடி,

தனியார் நிறுவன ஊழியர்களை அரிவாளால் வெட்டி ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சிகரெட் வியாபாரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் சிகரெட் மொத்த வியாபாரம் செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 30) வேலை பார்த்து வருகிறார்.

காரைக்குடி மாதவன் நகரைச் சேர்ந்த தமிழரசன் (வயது 27) அதே நிறுவனத்தில் வேன் டிரைவராக உள்ளார்.

நேற்று காலை விக்னேஷ் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சிகரெட் வினியோகம் செய்யவும் ஏற்கனவே வினியோகம் செய்த கடைகளில் பணம் வசூல் செய்யவும் வேனில் புறப்பட்டார். வேனை டிரைவர் தமிழரசன் ஓட்டினார்.

5 பேர் கும்பல்

பல்வேறு இடங்களில் வசூலை முடித்துவிட்டு மாலை 4.40 மணி அளவில் புதுவயலில் இருந்து காரைக்குடி நோக்கி வந்தனர். கோட்டையூர் பகுதியில் வந்தபோது, ஒரு காரில் வந்த 5 பேர், திடீரென வேனை வழிமறித்தனர். பின்னர் பயங்கர ஆயுதங்களோடு டிரைவர் தமிழரசனை தாக்கி வெளியே இழுத்து வேனின் சாவியை பிடுங்கினர்.

இதனை கண்ட விக்னேஷ், தான் பையில் வைத்திருந்த வசூல் பணம் ரூ.11 லட்சத்துடன் இறங்கி ஓடினார். அவரை துரத்திய கும்பல் அவரையும் அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு காரில் தப்பியது.

இது குறித்த தகவலின் பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரெண்டு வினோஜி தலைமையிலான போலீஸ் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்த விக்னேஷ், தமிழரசன் கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொள்ளை கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story