முயல் வளர்ப்பு


முயல் வளர்ப்பு
x

முயல் வளர்ப்பு தொழில் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்

திருநெல்வேலி

குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் தொழிலாக முயல் வளர்ப்பு விளங்கி வருகிறது. சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. முயல்களை இறைச்சிக்காவும், தோலுக்காகவும், ரோமத்துக்காகவும் வளர்க்கலாம். முயல் இறைச்சியில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இதனால் இந்த இறைச்சி நமது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. வீட்டு கொல்லை புறத்திலும், மொட்டை மாடிகளிலும், தோட்டத்திலும் முயல்களை வளர்க்கலாம். சுய வேலை வாய்ப்புக்கு முயல் வளர்ப்பு ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது. நிலமற்ற விவசாயிகள், படித்த, படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மாடு, ஆடு போன்றவைகளை பாராமரிக்க இயலாத கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் முயலை வளர்த்து அதிக லாபம் ஈட்டலாம்.

எளிதில் கிடைக்கும் தாவரங்களையும், வீட்டில் விளைகிற காய்கறிகளையும் முயல்களுக்கு அளிக்கலாம். இறைச்சி முயல்களை 3 மாத வயதிலிருந்து இறைச்சிக்கு பயன்படுத்தலாம். உடல் எடையில் 50 சதவீதத்துக்கு மேல் இறைச்சி கிடைக்கும். முயல் இறைச்சியில் குறைந்த அளவு கொழுப்பும், அதிக அளவு புரதம், உயிர் சத்துகள் மற்றும் தாது உப்புகள் உள்ளன. முயல்களில் தோலை பதனிட்டு நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம். முயல்களை 2 கிலோ உடல் எடையுள்ள போது வாங்கவேண்டும். பெண், ஆண் முயல்களையும் தனித்தனியே வெவ்வேறு பண்ணைகளில் இருந்து வாங்கவேண்டும். முயல்களை ஆழ்கூள முறை அல்லது கூண்டு முறையில் வளர்க்கலாம். எனினும் கம்பி கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்த முறையாகும்.

முயல்களுக்கு பச்சைத் தாவரங்கள், காய்கள், பழங்கள், நூசான், குதிரை மசால், டெஸ்மான்தஸ் என்னும் வேலி மசால், பெர்சிம், முட்டைக்கோஸ், ஸ்டைலோ எனும் முயல் மசால், கேரட், முள்ளங்கி, பீட்ரூட், புற்கள், பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளை கொடுக்கலாம். முயல் வளர்ப்பு தொழிலில் முழு முயற்சியோடு செயல்பட்டால் நல்ல வருமானம் பெறலாம்.


Next Story