இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும்
இனி ஆன்லைனில் மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரமுடியும் என்பது குறித்து அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு பணியைச் செய்து முடிப்பதற்கான செலவு விவரங்களை, ஒருவர் ஓர் அமைப்புக்கு தெரியப்படுத்தும் முழு விவர அட்டவணை தாங்கிய ஆவணமே ஒப்பந்தப்புள்ளியாகும்.
ஒப்பந்தப்புள்ளி பெட்டி
பொதுவாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத் துறை, வீட்டு வசதித் துறை, குடிசை மாற்றுவாரியம், விவசாய பொறியியல் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புதிய கட்டுமானப்பணிகள், பழுதுபார்ப்பு உள்ளிட்ட வேலைகளைச் செய்வதற்கு அந்தந்தத் துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
இதில் கலந்துகொண்டு பணிகளை செய்ய விரும்பும் ஒப்பந்ததாரர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளில் பணிகளை நிறைவேற்றி தருவதற்கான தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பம் செய்வார்கள்.
ஆணைக்கடிதம்
குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒப்பந்தப்புள்ளி பெட்டியை அதிகாரிகள் திறந்து, அதில் குறைந்த தொகை பதிவு செய்துள்ள தரமான ஒப்பந்ததாரரை தேர்வு செய்து அவருக்கு பணிகளை நிறைவேற்றி தருவதற்கான ஆணைக்கடிதம் வழங்குவார்கள்.
இதனை பெற்ற ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் வேலையை முடித்துத் தருவார்கள். ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் விண்ணப்பங்களை போடமுடியாமல் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களிடையே வாக்குவாதமும், சண்டை சச்சரவுகளும் நடப்பது வழக்கம். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒப்பந்தப்புள்ளிக்கு ஆன்-லைன் முறை
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஒளிவு மறைவற்ற நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்து, அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளிக்கும் ஆன்லைன் முறையை கடந்த 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதற்கு தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகள் இனி http://tntenders.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாரபட்சமில்லாத நடைமுறைகள்
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதுபற்றிய விவரங்கள் வருமாறு:-
அரசு ஒப்பந்தக்காரர் கட்டனூர் மச்சேஸ்வரன்:-
தமிழக அரசு ஆன்லைன் முறையில் ஒப்பந்த பணிகளுக்கு டெண்டர் முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் பணிகளுக்கான மதிப்பீடு பற்றிய விவரம் பெற முடியாத நிலையில் இ-டெண்டர் போடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் தொடர்புடைய சிலருக்கு மதிப்பீடு விவரம் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே பாரபட்சமில்லாத நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்
வரவேற்பு
ஒப்பந்தக்காரர் விருதுநகர் திலக் பாபு:-
தமிழக அரசு அரசு ஒப்பந்த பணிகளுக்கு ஆன்லைன் முறையை நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். இதனால் பாரபட்சமற்ற ஒப்பந்த முறை அமலுக்கு வர வாய்ப்பு ஏற்படும்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு பின்பு ஆன்லைனில் டெண்டர் பதிவு செய்தாலும் கணினி அதை ஏற்றுக் கொள்ளாது. எனவே இதில் குறிப்பிட்ட நபர்களுக்கு சலுகை காட்ட வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இதனால் அரசுக்கு தான் வருமான இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் டெண்டர்கோரும் அரசு அலுவலகங்களில் பழைய நடைமுறைப்படி ஷெட்யூல் விவரங்களை வாங்குவதற்கு பணம் செலுத்த வேண்டி இருந்தது. தற்போது ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டதால் அரசுக்கு இதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது. ஆனாலும் அரசு டெண்டர் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
வெளிப்படைத்தன்மை
ஏ.லட்சுமிபுரத்தை ேசர்ந்த ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் என்ற குட்டி:-
ஆன்ைலனில் ஒப்பந்தப்புள்ளி கட்டாயம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது தான். இதிலும் சில தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் முறையாக கண்காணிக்க வேண்டும். இந்த புதிய முறையின் மூலம் அதிகாரிகள் தாங்கள் விரும்பும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டுமான ஆணை கடிதம் வழங்க முடியாது. வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இந்த திட்டம் பொதுமக்களை எளிதில் சென்று அடையும்.
வீண் அலைச்சல்
செட்டியார்பட்டி ஒப்பந்ததாரர் முத்துராஜ்:- பொதுவாக டெண்டர் முறை என்பது இதற்கு முன்பு கவர் மூலம் எழுதி நகராட்சி, ஒன்றியம் அலுவலகத்தில் நேரடியாக சென்று கொடுக்கப்பட்டது. தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்வது என்பது வரவேற்கத்தக்கதாகும். ஏனென்றால் அனைத்துமே தற்போது ஆன்லைனில் பதிவு செய்து வருவதால் வீண் அலைச்சல் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக இருந்த டெண்டர் முறை தற்போது ஆன்லைன் மூலம் பதிவு என்ற புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் எவ்வித தொய்வும் இன்றி முழுவீச்சில் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிக பணிகள்
ஸ்ரீவில்லிபுத்தூரை ேசர்ந்த ஒப்பந்தக்காரர் வேல்முருகன்:- தற்போது அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வெட்ட வெளிச்சமாக நடைபெறும்.
மேலும் ஒப்பந்தகாரர்களுக்கு விலை கட்டுப்படி ஆகும் பட்சத்தில் அதிக வேலைகள் எடுக்க ஏதுவாக இருக்கும். தமிழக அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி என்றால் போட்டியும் அதிகமாக இருக்கும். இந்த அறிவிப்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
அதிகாரியை சந்திக்க வேண்டாம்
அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒப்பந்ததாரர் காமாட்சி ராஜன்:-
ஆன்லைன் முறையில் ஒப்பந்தம் வழங்கப்படுவது மிக எளிமையான முறையில் உள்ளது. ஆன்லைன் ஒப்பந்தம் என்பது வெளிப்படைத்தன்மையாக உள்ளது. இதனால் எந்த அதிகாரியையும் நேரில் சந்திக்க தேவையில்லை. பணம் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் முறையில் உள்ளதால் கையூட்டு என்ற பேச்சுக்கு இடமில்லை.
தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் ஒப்பந்த நடைமுறை என்பது வரவேற்கத்தக்கது.
ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'பொதுவாக பணிகளை பொறுத்தவரையில் ரூ.1 கோடி வரை ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு கண்காணிப்பு பொறியாளருக்கு அதிகாரம் உள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு முதன்மை பொறியாளரிடம் உள்ளது. அதற்கு மேல் உள்ள தொகைக்கு ஒப்புதல் அளிப்பதற்கு என்று 'ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்குழு' என்ற ஒரு குழு உள்ளது.
அதில் 3 முதன்மை பொறியாளர்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் நிதித்துறையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இடம் பெற்றிருப்பார். இவர்கள் ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி அளிப்பார்கள். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி கோருபவர்கள் தகுதி இல்லை என்றால் உடனடியாக தகுதி நீக்கம் செய்துவிட முடியும். அதேபோல் போலியான ஆவணங்கள் பதிவேற்றம் செய்தாலும் உடனடியாக தெரிந்துவிடும். தற்போது ஒப்பந்தப்புள்ளி என்றாலே 2 பேர் மட்டுமே போடுகின்றனர். அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி என்றால் போட்டியும் அதிகமாக இருக்கும். இந்த அறிவிப்பால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை'.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒப்பந்தபுள்ளி பெட்டிகளுக்கு ஓய்வு
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது. இதற்காக ஒப்பந்ததாரர்கள் தங்கள் படிவங்களை சமர்ப்பிப்பதற்காக அலுவலகங்களில் மரத்தால் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி பெட்டிகள் உள்ளன. இந்த பெட்டி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்படும். அதில் ஒப்பந்ததாரர்கள் தங்கள் ஒப்பந்தப் புள்ளிகளை போடுவார்கள்.
குறிப்பிட்ட கால இடைவெளியில் பெட்டி திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார். ஆனால் தற்போது அரசு ஆன்லைனில் தான் ஒப்பந்தப்புள்ளிகள் கோரமுடியும் என்று அறிவித்ததால் அரசு அலுவலகங்களில் உள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டிகளுக்கு ஓய்வு தரப்பட்டு உள்ளது. ஒரு சில அலுவலகங்களில் பழைய கோப்புகள் வைப்பதற்கு இந்தப் பெட்டிகளை பயன்படுத்தலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.