பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா போட்டி நடைபெற்றது.
வினாடி, வினா போட்டி
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான வினாடி, வினா போட்டி சிவகங்கை 21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின்ம மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் விவேகானந்தன், மாவட்ட கல்வி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் போட்டியின் நடுவர்களாக பங்கேற்றனர். இதில் 41 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 82 மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த போட்டியில் ஓ.வி.சி. பள்ளி மானமதுரை மாணவிகள் சரஸ்வதி, கார்த்திகாயினி முதலிடமும், புழுதிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மீனா, பிரபாவதி இரண்டாம் இடமும், ஒக்கூர் சோமசுந்தர செட்டியார் பள்ளி மாணவிகள் ஜனனி, வினிதா, தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரகாஷ், தண்டாயுதபாணி மூன்றாம் இடமும், காரைக்குடி மூ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிச்சான், சுப்பிரமணியன் நான்காம் இடமும் பெற்றனர்.
பரிசுகள்
இதை தொடர்ந்து வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திட்ட மேலாளர் நாகராஜன், மாவட்ட மேற்பார்வையாளர் வாருணி தேவியும் போட்டியை நடத்தினார்கள். சிவகங்கை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை 21 ஆம் நூற்றாண்டு சர்வதேச பதின் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் சங்கீதா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.