நீட் தேர்வை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை
நீட் தேர்வை ரத்து செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை
கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறோம். சாலை, குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூடுதலாக பாதாள சாக்கடை திட்ட பணிக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்க இருக்கிறது.
கடலூர் மாநகராட்சி பகுதி 4 மண்டலமாக பிரித்து, 4 மண்டல அலுவலகங்கள் 4 இடங்களில் ரூ.10 கோடியில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத மாற்றத்தை தற்போதைய ஆட்சியில் செய்து வருகிறோம். கடலூர் மாநகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை இல்லை. ஒரு சில இடங்களில் லாரி, டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதி, குடிநீர் வசதி கடந்த ஆட்சியில் செய்யவில்லை. நாங்கள் தற்போது படிப்படியாக இந்த வசதிகளை செய்து வருகிறோம்.
நீட் தேர்வு
கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கி வருகிறோம். மருதாடு, திருமாணிக்குழி பகுதிகளில் இருந்து ரூ.50 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்பெண்ணையாற்றில் இருந்து குடிநீர் கிடைப்பதற்கான வழிமுறைகளும் செய்யப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு குறித்து பா.ஜ.க. விமர்சனம் செய்வதாக கேட்கிறீர்கள். நீட் தேர்வு தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததே பாதகம். கவர்னரின் நடவடிக்கைகளை கண்டித்து தான் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யும் நடவடிக்கை விரைவில் உருவாகும். திட்டக்குடியில் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் முறைகேடு தொடர்பாக மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். விவசாயிகளின் கருத்துகளை கேட்ட பிறகு வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.