கல்குவாரி விபத்து விவகாரம்; கைதான குவாரி உரிமையாளர் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்
கல்குவாரி விபத்து விவகாரத்தில் கைதான குவாரி உரிமையாளரின் மகன் குமாருக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த மே 14-ந்தேதி பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குவாரியின் உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி குவாரி உரிமையாளர் மகன் குமார் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.