புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதல் - தகராறை விலக்க சென்ற வார்டனுக்கு அடி-உதை
புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள் மோதலில் ஈடுபட்டனர். தகராறை விலக்க சென்ற பெண் வார்டனை இருவரும் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகள், விசாரணை பெண் கைதிகள், தண்டனை பெண் கைதிகள் என 250-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நேற்று காலை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா சவுத், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சீனதாண்டா ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது அங்கு வந்த கோமளா என்ற பெண் வார்டன், தகராறில் ஈடுபட்ட இரு வெளிநாட்டு பெண் கைதிகளையும் விலக்கிவிட முயன்றார். உடனே இருவரும் சேர்ந்து வார்டன் கோமளாவை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த கோமளா, சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறை வார்டனை வெளிநாட்டு பெண் கைதிகள் அடித்து உதைத்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.