புழல் சிறை காவலருக்கு அடி-உதை; வெளிநாட்டு கைதி மீது வழக்கு
புழல் சிறை காவலரை அடித்து உதைத்த வெளிநாட்டு கைதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புழல்,
சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு கைதிகள் 4 பேர் செல்போன்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து வெளிநாட்டு கைதிகளை வெவ்வேறு அறைக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு கைதிகளின் அறைகளை மாற்றும் பணியில் சிறை காவலர்கள் ஈடுபட்டனர்.
அப்போது போதை பொருள் வழக்கில் கைதான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒலிசா மேத்தா இமானுவேல்(வயது 34) என்ற கைதியை வேறு அறைக்கு மாற்ற முயன்றபோது அவர் சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனை சந்திக்க வேண்டும் என சிறை காவலர் செல்வத்திடம் கேட்டார்.
அதற்கு செல்வம், சிறை கண்காணிப்பாளரை பார்க்க முடியாது என கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒலிசா மேத்தா இம்மானுவேல், சிறை காவலர் செல்வத்தை சரமாரியாக அடித்து உதைத்தார். இதில் அவருடைய போலீஸ் சீருடை கிழிந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறை காவலர் செல்வம், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் நைஜீரியா நாட்டு கைதி ஒலிசா மேத்தா இம்மானுவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புழல் சிறையில் சிறை காவலரை வெளிநாட்டு கைதி தாக்கிய சம்பவம் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.