கழிவுநீரை வாளியில் வைத்து மாலை அணிவித்து பொதுமக்கள் சாலைமறியல்


கழிவுநீரை வாளியில் வைத்து   மாலை அணிவித்து பொதுமக்கள் சாலைமறியல்
x

கழிவுநீரை வாளியில் வைத்து மாலை அணிவித்து பொதுமக்கள் சாலைமறியல்

மயிலாடுதுறை

வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கழிவுநீரை வாளியில் வைத்து மாலை அணிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வீரசோழன் ஆறு

காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் வழியாக சென்று தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. இந்தநிலையில் சங்கரன்பந்தல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்களில் உள்ள கழிவுநீர்களும் வீரசோழன் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆற்று நீர் மாசுபட்டு கருப்பு நிறமாக மாறி உள்ளது. இதனால் மீன்கள் செத்து மிதப்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. ஆற்றில் தண்ணீர் அருந்தும் கால்நடைகளின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

மேலும் ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் உத்திரங்குடி, சங்கரன்பந்தல் மற்றும் விசலூர் பகுதி பொதுமக்களுக்கு சரும நோய்களும் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்து கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலைமறியல்

வீரசோழன் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகளை கண்டித்து கழிவுநீரை வாளியில் எடுத்து வந்து நடுரோட்டில் வைத்து அதற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நேற்று காலை சங்கரன்பந்தல் கடைவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவில்லை. ஆனால் போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், மயிலாடுதுறை பொதுப்பணித்துறை காவேரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் விஜயபாஸ்கர், (செம்பனார்கோவில்) சீனிவாசன் (பொறையாறு), செம்பனார்கோவில் ஒன்றிய ஆணையர் மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, உத்திரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேசாக் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அதில் வீரசோழன் ஆற்றில் கழிவு நீரை விடும் வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் வீட்டின் உரிமையாளர்களை கண்டறிந்து துறை வாரியாக நோட்டீஸ் அனுப்பி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பது. கழிவு நீர் ஆற்றில் கலக்கும் பாதையை அடைத்து அப்புறபடுத்துவது. ஆற்றில் தேங்கி இருக்கும் கழிவு நீரை தேவனூர் தடுப்பு அணை வழியாக அப்புறப்படுத்துவது என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் மங்கைநல்லூர் - பொறையாறு செல்லும் பிரதான சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story