பா.ஜ.க.வினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு; 35 பேர் கைது


பா.ஜ.க.வினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு; 35 பேர் கைது
x

பா.ஜ.க.வினர்-போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

தாமரைக்குளம்:

ஊர்வலமாக வந்தனர்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் பா.ஜ.க.வினர் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க.வினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு தலைமையில் 2 துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் இளையராஜா உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக வந்தனர். அப்போது, சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தள்ளுமுள்ளு

அவர்களை, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்ளிட்ட 35 பேரை போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story