கருணாநிதி பிறந்த நாள்: திருச்செந்தூரில் தூய்மை விழிப்புணர்வு பேரணி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று திருச்செந்தூரில் தூய்மை விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்__
திருச்செந்தூர்:
கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்று திருச்செந்தூரில் தூய்மை விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
கருணாநிதி பிறந்தநாள் விழா
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் நகராட்சி சார்பில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சிவஆனந்தி, ஆணையாளர் வேலவன், துணை தலைவர் ஏ.பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவிகள்
பேரணியில், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி மாணவிகள், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகள் அனைவரும் `போடாதே போடாதே குப்பையை சாலையோரத்தில் போடாதே', `சுற்றுலா தலத்தில் தூய்மை திருச்செந்தூரின் மேன்மை', `வீட்டின் சுத்தம் தெருவின் சுத்தம், தெருவின் சுத்தம் ஊரின் சுத்தம்', `பூமி இருக்கு கணமா, அதற்கு நீ கொஞ்சம் குப்பையை குறையுமா', `நெகிழியை தவிர்ப்போம், துணிப்பையை பயன்படுத்துவோம்', `மறுசுழற்சி குப்பை இயற்கை உரமாகும்' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
இப்பேரணி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கி காமராஜர் சாலை, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியாக சென்று மீண்டும் காமராஜர் சாலை வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
முன்னதாக அமைச்சர் தலைமையில் அனைவரும் 'திருச்செந்தூர் நகர் தூய்மை' உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, தாசில்தார் சுவாமிநாதன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சிராணி, சாந்தா, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி ஆசிரியர்கள் சங்கரி நந்தினி, ஷீபா,
தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட அவை தலைவர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன்குடி
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி உடன்குடி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடி மெயின் பஜார், பரமன்குறிச்சிபகுதியில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ் ஏற்பாட்டில் 2 ஆயிரம் பேருக்கு தையல் எந்திரம், சைக்கிள்கள், வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பரமன்குறிச்சியில் ஒன்றிய தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர், 2 ஆயிரம் பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார். இந் நிகழ்ச்சிகளில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், யூனியன் துணைத்தலைவர் மீரா சிராஜூதீன், செட்டியாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆறுமுகநேரி
ஆத்தூர் நகர தி.மு.க. சார்பில் மெயின் பஜாரில் கருணாநிதியின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு அமைச்சர் மாலை அணிவித்தார். மேலும் 100 பேருக்கு இலவச வேட்டி மற்றும் இலவச அரிசி பைகளையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், ஆத்தூர் பஞ்சாயத்து தலைவர் கமால்தீன், முன்னாள் தலைவர் முருகானந்தம், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து அமைச்சர் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர தி.முக. சார்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவினார். மேலும் அங்கு 20 பேருக்கு சுயதொழில் செய்வதற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காயல்பட்டினம்
இதேபோல் காயல்பட்டினம் நகர தி.மு.க. சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. புதிய பஸ்நிலையம் முன்பு கருணாநிதியின் படம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அங்கு பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகரசபை தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஏ.எஸ். முத்து முகமது இலவச உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர் கதிரவன், முகமது முகைதீன், நகரசபை துணை தலைவர் சுல்தான் லெப்பை மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.