பூரி கோவில் சாவி விவகாரம்: பிரதமர் பேசியதை திரித்து கூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்


மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
x

தமிழக மக்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் முதல்-அமைச்சரின் அறிக்கை அப்பட்டமான பொய் என ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

சென்னை,

மக்களவை தேர்தலையொட்டி பூரி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்களிடம் தொடர்ந்து வெளியே செல்லும் நிலை இருக்கிறது.

பூரி ஜெகநாதர் கோவிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகநாதர் கோவில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழகத்தை சேர்ந்த ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்" என விமர்சித்து இருந்தார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் மதுரையைச் சேர்ந்தவருமான வி.கே. பாண்டியனின் பெயரைதான் பிரதமர் மோடி மறைமுகமாக சாடினார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு வி.கே. பாண்டியனும் எதிர்வினையாற்றினார். கெந்தரபாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய பி.கே.பாண்டியன்,

நவீன் பட்நாயக்கின் தூய்மையான இமேஜ் பற்றி உலக மக்களுக்கு நன்றாகவே தெரியும். கடவுளை வைத்து அரசியல் செய்ய மாட்டோம். மோடியிடம் அதிகாரிகள் உள்ளனர் கண்டுபிடிக்கட்டும் என கூறினார்.

இதற்கிடையே மோடியின் பேச்சு தமிழர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது தமிழ்நாட்டு மக்களைத் திருடர்களைப் போலவும், வெறுப்பு மிகுந்தவர்களாகவும் அந்த மாநிலங்களுக்கு எதிரானவர்களாகவும் பேசுவது இரட்டை வேடம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள். வாக்குக்காகத் தமிழ்நாட்டையும் தமிழர்களையும் அவதூறு செய்வதைப் பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிக்கை அப்பட்டமான பொய் என தமாக தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை தமிழர்களுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பாக திரித்துப் பேசி, தவறாக தமிழக மக்களுக்கும், ஒடிசா மக்களுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடிய வகையில் வெளியிட்டிருக்கும் தமிழக முதல்-அமைச்சரின் அறிக்கை அப்பட்டமான பொய்.

அதாவது பிரதமர் பேசியப் பேச்சுக்கும் முதல்வர் அதற்கு கூறும் அர்த்தமும், குற்றச்சாட்டும் தமிழக முதல்வர் அவர்கள் மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி மற்றும் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது தேவையில்லாமல் ஒரு அவதூறை ஏற்படுத்தியிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Next Story