தூய சவேரியார் ஆலய திருவிழா
விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய திருவிழாவை பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
விருதுநகர் பாண்டியன் நகர் தூய சவேரியார் ஆலய திருவிழாவை பேராயர் அந்தோணி பாப்புசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
ஆலய திருவிழா
விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள தூய சவேரியார் ஆலய 21-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, பாண்டியன் நகர் பங்குத் தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கியம் அடிகளார், பள்ளி பொருளாளர் மார்ட்டின் குமார் அடிகளார் மற்றும் பங்கு இறை மக்கள் முன்னிலையில் தூய சவேரியார் திருவுருவம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும், மறை உரையும் நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தேர்பவனி
திருவிழா நாட்களில் தினசரி ஜெபமாலை வழிபாடு அதனை தொடர்ந்து திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 3-ந் தேதி மாலை தேர்பவனி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 4-ந் தேதி ஆடம்பர கூட்டு திருப்பலியும், மறை உரையும், திவ்விய நற்கருணை பவனியும் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து கொடிஇறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் பாண்டியன் நகர் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார் தலைமையில் பங்கு பேரவை அன்பியங்கள், பக்தசபைகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.