மலைநாச்சி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா


மலைநாச்சி அம்மன் கோவிலில் புரவி எடுப்பு திருவிழா
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே செம்மாம்பட்டி கிராமத்தில் உள்ள மலைநாச்சி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே செம்மாம்பட்டி கிராமத்தில் உள்ள மலைநாச்சி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

மலைநாச்சி அம்மன் கோவில்

எஸ்.புதூர் அருகே செம்மாம்பட்டி மலைநாச்சி அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு 42 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த மாதம் பிடி மண் எடுத்து வேளார் வம்சாவளியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து வேளார் தெருவில் புரவிகள் செய்யும் பணி நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு நேற்று புரவி எடுப்பு விழா நடைபெற்றது. புரவிகள் செய்யப்பட்ட இடத்தில் இருந்து புரவிகளை சுமந்து செம்மாம்பட்டி ஊருணியை வந்து அடைந்தனர்.

புரவி எடுப்பு திருவிழா

அங்கு புரவிகளுக்கு மாலை, வேட்டி, துண்டு, சிறப்பு அலங்காரங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் கன்னிமார், அரசுமகன், ஆலத்தி அம்மன், பைரவர், நாகம், குதிரை, யானை, மதலைகள், நேர்த்திகடன் புரவிகள் என கிராமம் சார்பில் செய்யப்பட்ட புரவிகள் முன்னே செல்ல, நேர்த்திகடன் புரவிகள் தொடர்ந்து வந்தன.

இதில் சாமி புரவிகள் 11 உள்பட மொத்தம் 65 மண்ணால் செய்யப்பட்ட புரவிகளை தோளில் சுமந்து செம்மாம்பட்டி பூதக்கல் மலையில் உள்ள மலைநாச்சி அம்மன் கோவிலில் இறக்கி வைத்து வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story