பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நெல்லையில் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் முதலாவது சனிக்கிழமை நேற்று வந்தது. இதையொட்டி நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரம் பெருமாள் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவில் கருடசேவை நடந்தது.
கருட சேவை
இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை நடைபெற்றது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நேற்று காலை நேரத்தில் நவ திருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இதே போல் நெல்லை பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களுக்கும், சேரன்மாதேவி, அம்பை பகுதியில் இருந்தும் அந்தந்த பகுதி பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.