வாலிபருக்கு நூதன தண்டனை
கொடைக்கானல் அருகே மின்வேலியில் சிக்கி கடமான் பலியான சம்பவத்தில் வாலிபருக்கு நூதன தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கொடைக்கானல் அருகே செம்பிரான்குளத்தில் உள்ள தனியார் தோட்டத்துக்குள் கடந்த 21-ந்தேதி கடமான் ஒன்று புகுந்தது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள், கடமானின் உடலை கைப்பற்றி பரிசோதனை செய்து அப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் திலீப், வனச்சரகர் குமரேசன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த மகுடேஸ்வரன் மகன் கருப்புத்துரை (வயது 23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே கருப்புத்துரை, ஜாமீன் கேட்டு கொடைக்கானல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கார்த்திக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருப்புத்துரைக்கு ஜாமீன் வழங்கி அவர் உத்தரவிட்டார். மேலும் நூதன தண்டனையும் கருப்புத்துரைக்கு மாஜிஸ்திரேட்டு வழங்கினார். அதன்படி, கருப்புத்துறை ரூ.25 ஆயிரத்தை மாவட்ட வன அலுவலரிடம் செலுத்த வேண்டும். அதன்மூலம் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வனவிலங்குகளால் ஏற்படும் நன்மைகள், வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை வனத்துைற அதிகாரிகளுடன் இணைந்து செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதுதொடர்பான அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.