புதுக்கோட்டை கோவில் உண்டியல்களில் காணிக்கைகளை எண்ணும் பணி மும்முரம்
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற 30-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை கோவில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
ரூ.2 ஆயிரம் நோட்டு
நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ந் தேதி அறிவித்தது. மேலும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அதனை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது. அதன்படி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ரூ.2 ஆயிரம் நோட்டை மாற்ற வருகிற 30-ந் தேதி கடைசிநாளாகும். இந்த நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உண்டியல்களை வருகிற 29-ந் தேதிக்குள் திறந்து அதில் உள்ள காணிக்கைகளை எண்ணும்படியும், அதில் ரூ.2 நோட்டுகள் இருந்தால் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றவும் துறை சார்பில் அறிவறுத்தப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் கோவில்களில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டு வருகிறது.
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன. செயல் அலுவலர் முத்துராமன் தலைமையில் ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், மாணவிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 12 உண்டியல்களில் இருந்து ரூ.10 லட்சத்து 82 ஆயிரத்து341 காணிக்கை கிடைத்தது. இந்த காணிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டு ஒன்று இருந்துள்ளது. தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மிலாடி நபியையொட்டி அரசு விடுமுறையாகும். மற்ற கோவில்களில் நாளை (வெள்ளிக்கிழமை) உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணப்பட உள்ளது. தொடர்ந்து 30-ந் தேதிக்குள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற உள்ளனர்.