புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தை தற்காலிகமாக இடம் மாற்ற முடிவு


புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தை தற்காலிகமாக இடம் மாற்ற முடிவு
x

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் பஸ் நிலையத்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

கட்டிடங்கள் சேதம்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கடந்த 1981-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கிருந்து தஞ்சாவூர், மதுரை, சென்னை, திருச்சி, ராமேசுவரம், காரைக்குடி உள்பட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். டவுன் பஸ்கள், புறநகர பஸ்கள் தனித்தனியாக இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் கான்கிரீட் சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் மேற்கூரையில் இருந்து அவ்வப்போது சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில் 2 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் தற்காலிகமாக மேற்கொள்கின்றனர்.

தற்காலிக பஸ் நிலையம்

இந்த நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள எழில்நகர், ஆலங்குளம் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி ஒரிரு நாட்களில் தொடங்க உள்ளது. இந்த இடத்தை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தற்காலிக பஸ் நிலைய அமைக்கும் பணி முடிவடைந்ததும், புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

72 கடைகள்

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய கட்டிடம் முழுவதையும் இடித்து விட்டு புதியதாக கட்டப்பட உள்ளது. இதற்காக ரூ.18 கோடியே 90 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது பஸ் நிலையத்தில் 72 கடைகள் உள்ளன. இந்த கடைகள் அப்படியே இருக்கும் வகையில் கட்டுமான பணிகள் நடைபெறும்.

தற்காலிக பஸ் நிலையம் இயக்கப்படும் தேதி பின்னர் தெரியவரும். தற்காலிக பஸ் நிலைய பணிகள் முடிவடைந்த பின் புதிய பஸ் நிலையத்தில் கட்டிடங்களை இடித்து விட்டு கட்டுமான பணி நடைபெறும்'' என்றனர்.


Next Story