புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் 101-வது பிறந்த நாள் விழா


புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் 101-வது பிறந்த நாள் விழா
x

புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான் 101-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மாமன்னர் பிரகதாம்பாள் தாஸ் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 101-வது பிறந்தநாள் விழா புதுக்கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாமன்னரின் சிலைக்கு மன்னரின் மகன் ராஜகோபால தொண்டைமான் மற்றும் அவரது மனைவியும் திருச்சி முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமான் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மன்னர் நூற்றாண்டு விழா குழு செயலாளர் சம்பத்குமார், நகர்மன்ற துணை தலைவர் லியாகத் அலி, விநாயகா பார்மசி குமார், டாக்டர். ராமதாஸ், அ.ம.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வீரமணி, நகர செயலாளர் முத்தாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், நகர செயலாளர் செந்தில் ஆகியோர் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மன்னரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்கு பின் சாருபாலா தொண்டைமான் நிருபர்களிடம் கூறியதாவது:- மன்னருக்கு நினைவு மண்டபம் வைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தபோது, அதற்கு நினைவு மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மன்னர் நூற்றாண்டு விழா குழு 2 முறை கலெக்டர் மற்றும் அமைச்சரை பார்த்து கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே இடம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். மேலும் அப்போது புதுக்கோட்டைக்கு வந்த சட்டசபை குழு மூலம் செல்வப்பெருந்தகையிடம் தெரிவித்தோம். அதற்கு 2 ஏக்கர் நிலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்றனர். நாட்டையே ஆண்ட மன்னர் 100 ஏக்கர் கொடுத்தார். ஆனால் அதில் அவருக்கு 2 ஏக்கர் கொடுப்பதில் இதற்கு முன்பு இருந்த கலெக்டருக்கு மனம் இல்லை. இது மிகவும் வருத்தமாக உள்ளது. ஆகையால் இதை கவனத்தில் எடுத்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் அடுத்த ஆண்டிற்குள் நினைவு மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்து, அரசு விழாவாக நடைபெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story