புதுக்கோட்டையில் புத்தக திருவிழா 28-ந் தேதி தொடங்குகிறது
புதுக்கோட்டையில் புத்தக திருவிழா 28-ந் தேதி தொடங்குகிறது.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 6-வது புத்தகத் திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி வரை 10 நாட்கள் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற உள்ளது. வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டரும், புத்தகத் திருவிழாக்குழு தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து பேசுகிறார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் சிறப்புரை, மூத்த விஞ்ஞானி வெங்கடேஸ்வரனின் அறிவியல் உரை, கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. வருகிற 29-ந் தேதி பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமியின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் எழுத்தாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 6-ந் தேதி சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் கவிதா ராமு, நடிகர் தாமு ஆகியோர் பங்கேற்கின்றனர். புத்தகத் திருவிழா அழைப்பிதழை புதுக்கோட்டை உயர் தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டார். அப்போது ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம் மூர்த்தி, மணவாளவன், வீரமுத்து உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.