புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரகளை: குள்ளஞ்சாவடி போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
புதுச்சேரி கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட குள்ளஞ்சாவடி போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி எல்லையான கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் கிருமாம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கக்தக்க ஆண் ஒருவர் குடிபோதையில் சாலையோரம் படுத்துக்கொண்டு, அந்த வழியாக சென்ற பொதுமக்களை திட்டினார்.
இதை பார்த்த போலீசார், அந்த வாலிபர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் ஆத்திரமடைந்த அவர், போலீசாரை ஆபாசமாக பேசி, தாக்கியதாக தெரிகிறது.
இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் பிடித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் நானும் போலீஸ் தான் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்து, ரகளையில் ஈடுபட்டதோடு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடன் அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
பணியிடை நீக்கம்
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கடலூர் அருகே பூவாணிக்குப்பத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 38) என்றும், குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் ஜனார்த்தனன் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
இது பற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் விசாரித்து வந்த நிலையில், நேற்று ஜனார்த்தனனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.