பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
கூடலூர் அருகே ஊருக்குள் வரும் காட்டு யானையை விரட்ட கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
கூடலூர்,
கூடலூர் அருகே ஊருக்குள் வரும் காட்டு யானையை விரட்ட கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் காட்டு யானையை விரட்ட கோரி அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நேற்று முன்தினம் இரவு அஞ்சு குன்னு பகுதியில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வன அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
உடன்பாடு ஏற்பட்டது
இந்தநிலையில் நேற்று மாலை 4 மணிக்கு கவுண்டன் கொல்லி அரசு பள்ளிக்கூட வளாகத்தில் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா தலைமையில் தாசில்தார் சித்தராஜ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ், மசினகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது வன அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தனர். பின்னர் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தனர். இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கால வரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.