பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்
நெல்லை பழைய பேட்டையில் பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேட்டை:
நெல்லை பழைய பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது பெய்த மழையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
மேலும் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை வைத்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழைய பேட்டை நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் நேற்று காலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன், பேட்டை இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, அன்னலட்சுமி மற்றும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் வெங்கடகிருஷ்ணன், பைஜூ மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஒரு வார காலத்திற்குள் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.