முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8,12,14,15 ஆகிய வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு வளர்ச்சி திட்டப்பணிகள் ஏதும் செய்யவில்லை. ஏற்கனவே செய்த ஒரு பணிக்கு காசோலை வழங்க வில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி கவுன்சிலர்கள் தமீம் அன்சாரி, ஜெகபர் அலி, மெகருன்னிசா, பெனாசிரா ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராம மூர்த்தி மற்றும் பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் தரப்பில் ஒருவார காலத்தில் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து 5 மணிநேரத்திற்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.