பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமிக்க வேண்டாம் - சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்


பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமிக்க வேண்டாம் - சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள்
x

பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரை சேமிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை

குடிநீர் மாதிரி ஆய்வு

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினசரி ஆயிரம் மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பருவமழை காரணமாக 600 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது. தொடர்ந்து நடந்துவரும் பணியில் இதுவரை 24 ஆயிரத்து 520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.

10 லட்சம் குளோரின்மாத்திரைகள்

பாதுகாப்பான குடிநீர் வழங்கும்வகையில் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் நீரேற்று நிலையங்கள் மற்றும் 16 குடிநீர் வினியோக நிலையங்களில் 11 டன் குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர 12 லட்சம் குடியிருப்புகளுக்கு இதுவரை 10 லட்சத்து 40 ஆயிரம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமலிருக்க குடிநீரை பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டர் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க

பொதுமக்களும் குடிநீரை காய்ச்சி பருகுவதுடன், தேவைக்கு அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம். குடிநீர் சேமிக்கும் பாத்திரங்கள், டிரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.

பருவமழைக் காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க பொதுமக்களும் குடிநீர் வாரியத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


Next Story