பொதுமக்கள் சாலை மறியல்
நிலக்கோட்ைட அருகே சிலுக்குவார்பட்டியில் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டி மாதா கோவில் தெருவில் டிரான்ஸ்பார்மர் ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென்று பழுதானது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்து டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட கோளறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மீண்டும், மீண்டும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டனர். மேலும் மின்தடையால் தண்ணீரும் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் மின் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மதுரை- பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நிலக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மூர்த்தி மற்றும் சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ஜெயசீலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் நேற்று (இன்று) இரவுக்குள் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.