பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்


தினத்தந்தி 17 Oct 2023 2:15 AM IST (Updated: 17 Oct 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி உப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி உப்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டு யானைகள்

பந்தலூர் தாலுகா உப்பட்டி அருகே பெருங்கரை, சேலக்குன்னு, ஏலமன்னா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, விளைநிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள தென்னை, பாக்கு, வாழைகள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் உப்பட்டி அருகே பெருங்கரையில் குட்டிகளுடன் 3 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அங்கு ஒரு வீட்டின் சமையலறையை உடைத்து சேதப்படுத்தின. மேலும் பயிர்களை மிதித்து நாசம் செய்தன. தொடர்ந்து குடியிருப்புகளை முற்றுகையிட்டது.

சாலை மறியல்

நேற்று உப்பட்டியில் இருந்து பெருங்கரை முருகன் கோவில் வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் காட்டு யானைகள் முகாமிட்டு, வாகனங்களை வழிமறித்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பந்தலூர்-பாட்டவயல் சாலையில் உள்ள உப்பட்டியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பிதிர்காடு வனச்சரகர் ரவி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் காட்டு யானைகள், கரடிகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. சில நேரங்களில் மக்களை தாக்கி வருகின்றன. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவும், கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதற்கு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டு யானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.


Next Story