ஆரணி அருகே பொதுமக்கள் சாலை மறியல்
ஆரணி அருகே பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இந்த நிலையில் அரிசி ஆலைகளில் அரிசி உற்பத்தியின் போது உமியை கொண்டு அடுப்பு எரிக்கின்றனர். உமி எரிந்த உடன் சாம்பல் காற்றில் அதிக அளவில் பறந்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்கு கருப்பாக சாம்பல் உமி அதிக அளவில் படிந்து அவதிக்குள்ளாகின்றனர். இதனால் பல்வேறு வியாதிகள் வரக்கூடிய நிலையும் உருவாகி வருகிறது.
இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள ஈபி நகர் மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ராட்டினமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், இதுபற்றி அதனை கலெக்டர், மாவட்ட, மாநில மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து பொது சுகாதார கேடு குறித்து அதற்குரிய விண்ணப்பத்தை அவர்களிடம் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்களிடம் கூறினர்.
அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.