உத்தண்டியில் பொதுமக்கள் சாலை மறியல்
நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய திறந்த வெளி நிலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தனியார் அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் ஒன்று சுற்று சுவர் அமைத்து சொந்தம் கொண்டாடுவதாக கூறி அங்கு அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவரை நேற்று பொதுமக்கள் இடித்துள்ளனர்.
பின்னர் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து தீடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் நடுவே மரம், இரும்பு கம்பங்களை போட்டு சாலையிலேயே அமர்ந்தும் படுத்தும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீஸ் துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து வருவாய் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.