இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தென்காசியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி தென்காசியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2023 6:45 PM GMT (Updated: 27 Feb 2023 6:46 PM GMT)

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், கலால் உதவி ஆணையர் நடராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 439 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தின் மூலம் இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கிற்கான செலவினம் வழங்கும் திட்டத்தின் கீழ் 16 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு நிதி உதவி தலா ரூ.17,000 வீதம் ரூ.2 லட்சத்து 72,000 மதிப்பிலான காசோலைகளும், ஒரு பயனாளிக்கு ரூ.2,500 மதிப்பிலான காதொலி கருவியும், 2 பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதற்கான பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள்

தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், இடைகால், கடையம், சிவராமபேட்டை, மேல மெஞ்ஞானபுரம், மத்தளம்பாறை ஆகிய பகுதியில் உள்ள பொதுமக்கள் காட்டுநாயக்கர் சமுதாய மக்களின் மாணவ மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், தொகுதி செயலாளர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் சித்திக் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

பெண்கள் மனு

சுரண்டை அருகே உள்ள குருங்காவனம் பகுதியைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள் கொடுத்துள்ள மனுவில், சுரண்டை மத்திய கூட்டுறவு வங்கியில் அரசு தள்ளுபடி செய்த சுய உதவிக் குழு கடனை செலுத்த கூறுவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story