கெங்கவல்லி அருகே சமத்துவபுரத்தில் வளர்ச்சி பணிகளை செய்ய பொதுமக்கள் 2-வது நாளாக எதிர்ப்பு போலீசார் எச்சரிக்கையால் கலைந்து சென்றனர்
கெங்கவல்லி அருகே சமத்துவபுரத்தில் வளர்ச்சி பணிகளை செய்ய பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
கெங்கவல்லி,
சமத்துவபுரம்
கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி உள்ளன. இதையடுத்து அந்த வீடுகளை பராமரிக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 52 வீடுகளை பராமரிக்க தலா ரூ.1 லட்சமும் மீதமுள்ள 48 வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை பராமரிப்பு நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த பணிகளை மேற்கொள்ளவும், சாலை மற்றும் பூங்காக்களை சீரமைக்க ஒப்பந்ததாரர் மற்றும் பணியாளர்கள் நடுவலூர் சமத்துவபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தனர்.
அப்போது ஒரே அளவிலான மதிப்பீட்டில் அனைத்து வீடுகளையும் முறையாக பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பணியை தொடங்க சமத்துவபுரம் பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் எந்த ஒரு வேலையையும் செய்யாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
2-வது நாளாக எதிர்ப்பு
இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் சமத்துவபுரத்தில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் புல்டோசர் எந்திரம் மற்றும் பணியாளர்களுடன் வந்தார். அப்போது 2-வது நாளாக அங்கிருந்த சமத்துவபுர பயனாளிகள் மீண்டும் பணியை செய்ய விடாமல் பொக்லைன் எந்திரம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் கெங்கவல்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் வீடுகளை பராமரிப்பதற்காக நிதியை சம அளவில் ஒதுக்கி தந்து விட்டு வேலை செய்யுமாறு கூறினார்கள்.
எந்த குறைகள் என்றாலும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரை சந்தித்து பொதுமக்கள் குறைகளை சொல்லுங்கள், ஆனால் அரசு பணியை செய்ய விடாமல் தடுக்கக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்பு அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.