ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், செயலாளரை பூட்டி வைத்து பொதுமக்கள் போராட்டம்
பொதுப்பாதையை அடைத்து கழிவறை கட்டும் முயற்சியில் ஈடுபட்டதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர், செயலாளரை பூட்டி வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பாதை அடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் பாச்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பன்னீர் செல்வம் (வயது 60). இவர் மீது தொழிலதிபர்களுக்கு கடன் வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி, கள்ள நோட்டுகளை மாற்றுவது, குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவது உள்ளிட்ட 22-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறமாக இருக்கும் வயல் மற்றும் தோட்டங்களுக்கு செல்ல அந்த பகுதியை பொதுப்பாதையாக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் திடீரென அந்த பொதுப்பாதையை அடைத்து அதில் கற்களை கொட்டி வைத்து, அந்த இடத்தில் கழிவறை கட்ட இருப்பதாகவும், அதனால் இனிமேல் இந்த பொதுப்பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.
போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த பன்னீர்செல்வத்தையும், ஊராட்சி செயலாளர் முத்துக்குமாரையும் அலுவலகத்தின் உள்ளேயே வைத்து பூட்டுப்போட்டு பூட்டினர். தொடர்ந்து அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சி மன்ற தலைவராக இவர் பொறுப்பேற்றது முதல் எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்கவில்லை. ஏதேனும் கோரிக்கைக்கு சென்றால் கூட மக்களை அலட்சியமாக நடத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னையா மற்றும் அதிகாரிகள், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.
மேலும் இதுகுறித்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூட்டை திறந்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளரை ஆலங்குடி போலீசார் வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.