டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கடையாலுமூட்டில் டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அருமனை,
கடையாலுமூட்டில் டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
அருமனை அருகே கடையாலுமூடு சந்திப்பில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் ஆலயங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தை, குடியிருப்புகள் உள்ளன. இதனால் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவர்களால் அந்த பகுதி மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
எனவே அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் கடையல் பேரூராட்சியில் போங்கின் காலை என்ற இடத்திற்கு டாஸ்மாக் கடையை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் கடை அமைய இருக்கும் பகுதியிலும் தேவாலயம் மற்றும் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இதனால் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் முன் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கு கடையல் பேரூராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் விஜிமெர்லின் முன்னிலை வகித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் கிறிஸ்டி, ஜாண்சைரஸ், சந்தியா, ஜாண் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் 'டாஸ்மாக் கடை வேண்டாம்', 'டாஸ்மாக் கடையை திறக்காதீர்கள்' என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள். இதில் பெண்களும் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டம் 11 மணி வரை நடந்தது.