முருகன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு


முருகன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x

கறம்பக்குடியில் முருகன் கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

புதுக்கோட்டை

முருகன் கோவில்

கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் உள்ள முருகன் கோவில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், அனுமன் கோவில் போன்றவை நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முருகன் கோவில் உள்பட 3 கோவில்களையும் இடித்து அகற்றுமாறு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முருகன் கோவிலை இடித்து அகற்ற முயற்சி செய்தனர். ஆனால் இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தொடர்ந்து கைவிடப்பட்டது.

கோவிலை இடிக்க எதிர்ப்பு

இந்நிலையில் இன்று முருகன் கோவிலை இடித்து அகற்ற போவதாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்கனவே கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நடராஜன் தலைமையில் நெடுஞ்சாலை ஊழியர்கள் கறம்பக்குடி வந்தனர். முருகன் கோவில் அருகே ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கோவில் அருகே கூடி முருகன் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முயற்சியை கைவிட்டனர்

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் கோவில் இருப்பதாகவும், ஏழை, எளிய, சாமானிய மக்கள் வழிபடும் இந்த கோவிலை இடிக்க கூடாது எனவும் தெரிவித்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோவில் இடிப்பு முயற்சியை கைவிட்டு சென்றனர்.


Next Story