காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x

ஆம்பூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவரை சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

ஆம்பூர் அடுத்த பாப்பனபள்ளி ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கவில்லை எனவும், இது குறித்து மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாணியம்பாடி- பேரணாம்பட்டு சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவலறிந்ததும் இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பூபதி மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் பேசினர்.

சிறை வைப்பு

அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் உள்ளே சிறைபிடித்து அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

மேலும் அதிகாரிகள் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதுவரை நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் தொழிற்சாலை வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் கடும் அவதி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் மற்றும் உமராபாத் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story