பழனி அருகே மண் லாரிகள் தெருவில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்


பழனி அருகே மண் லாரிகள் தெருவில் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
x

ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அ.கலையம்புத்தூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் பழனி-உடுமலை- கொழுமம் சாலை சந்திப்பு பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பழனி

பழனி அருகே அ.கலையம்புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது காமராஜபுரம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அ.கலையம்புத்தூர் அருகே உள்ள விளைநிலங்களுக்கு காமராஜபுரம் தெரு வழியே மாட்டு வண்டி, டிராக்டர், அறுவடை எந்திரம் சென்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயல்வெளி பகுதியில் இருந்து மண் அள்ளி வரும் லாரிகள் காமராஜபுரம் தெரு வழியே சென்று வருகிறது. இதனால் தெருவின் சிமெண்ட் சாலை முற்றிலும் சேதம் அடைந்தது.

இந்த நிலையில் இன்று காலை காமராஜபுரம் பகுதி ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அ.கலையம்புத்தூருக்கு திரண்டு வந்தனர். பின்னர் பழனி-உடுமலை- கொழுமம் சாலை சந்திப்பு பகுதியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது தெருவில் மண் ஏற்றி வரும் லாரிகள் செல்வதால் சாலை முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. எனவே மண் லாரிகள் தெரு பகுதியில் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய் தூர்வாருதல், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து பழனி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

அதன் பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பழனி உடுமலை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story