சுடுகாடு வசதி கேட்டு குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு
உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால் சுடுகாடு வசதி செய்து தர வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால் சுடுகாடு வசதி செய்து தர வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.
விருப்பாட்சிபுரம் குளவிமேடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியின் அருகே 1-வது குளவிமேடு கிராமம் உள்ளது. எங்கள் குடியிருப்பை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 17-ந் தேதி இறந்து விட்டார். அப்போது 1-வது குளவிமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் ஊர் மக்களுக்கே சுடுகாட்டில் இடமில்லை என்று கூறி அங்கு அடக்கம் செய்ய இயலாது என்று தெரிவித்தனர்.
நாங்கள் அனைவரும் ஊர்மக்களிடம் எங்களது நிலையை எடுத்துக் கூறி அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின்னர் இந்த ஒருமுறை மட்டும் அடக்கம் செய்ய அனுமதி வழங்கினர். அவர்கள் கேட்டபடி நாங்கள் எழுத்து பூர்வமாக அவர்கள் கேட்டபடி கொடுத்தோம்.அதன்பின் அந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்தோம். எனவே அதிகாரிகள் எங்கள் மனு மீது விசாரணை மேற்கொண்டு எங்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்
குடியாத்தம் அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ''குடியாத்தம்- பலமநேர் சாலை விரிவாக்க பணிக்காக எங்கள் பகுதியில் உள்ள சுமார் 60 வீடுகளை அரசு கையகப்படுத்த உள்ளது. எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பின்னர் சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் ரமேஷ் அளித்துள்ள மனுவில் ''குடியாத்தம் பிச்சனூர்பேட்டையில் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்'' என கூறியிருந்தார்.
தரைப்பாலம் அமைக்க வேண்டும்
பாலாறு பாதுகாப்பு சமூக விழிப்புணர்வு இயக்கத்தினர் அளித்துள்ள மனுவில்,'' திருமணி- மேல்மொணவூர் இடையே பாலாற்றில் மண்ணை கொட்டி அமைக்கப்பட்டிருந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மழை காரணமாக அந்த பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றை கடக்க சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிக்கொண்டு வர வேண்டும்.
எனவே திருமணி- மேல்மொணவூருக்கு பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும்'' என கூறியிருந்தனர்.
வேலூர் அருகே நஞ்சுகொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், ''நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சியில் உள்ள ஏரியில் அமிர்தி நாகநதி ஆற்றில் இருந்து கால்வாய் வழியாக நீர் சேமிக்கப்பட்டு அந்த நீர் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர்வரத்து கால்வாய் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகறறி ஏரிக்கரையையும் பலப்படுத்த வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.