வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் 677 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 30 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.59 ஆயிரத்து 756 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வீட்டுமனை

கரூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடில்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வரும் ஆட்டோ, கட்டுமானம், தையல், உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் மூலம் குடியிருப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசின் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் மூலமாக உத்திரவாதம் அளிக்கப்பட்ட மண்மங்கலம், ராமேஸ்வரப்பட்டி, காளிபாளையம், பவித்திரம் குரும்பப்பட்டி, காருடையான்பாளையம், நெடுங்கூர் பகுதி மக்களுக்கும் உடனடியாக இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ, கட்டுமானம், தையல், பொதுத்தொழிலாளர்கள் சங்கம், சி.ஐ.டி.யு. சார்பில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக்கூறினர். இதனால் போலீசாருக்கும், பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு ஆட்டோ, கட்டுமானம், தையல், பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவை மக்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்து விட்டு சென்றனர்.

கைது

தரமற்ற வீடுகளை கட்டிம்கொடுத்த மற்றும் முறையாக தார் சாலைகள், சாக்கடைகள், குடிநீர் வசதிகள் செய்து தராத தனியார் நிறுவனத்தை கண்டித்து ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட காலனி சேகர் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.


Next Story