குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
குடிநீர் கேட்டு
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 306 மனுக்களை பெற்றார்.கூட்டத்தில், கடவூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு சுமார் 2 ஆண்டுகளாக குடிக்க நல்ல குடிதண்ணீர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் 100 நாள் வேலை திட்டம் மாதத்திற்கு ஒரு வாரம் மட்டும் தான் எங்களுக்கு கிடைக்கிறது. அதனை ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
கிருஷ்ணராயபுரம் மணிநகரை சேர்ந்த அமிர்தானந்தம் என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் குடிநீர் குழாய்கள் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்கள் உடைந்தால் சாலையும் சேர்ந்து சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே குடிநீர் குழாய்களை சோதனைக்கு உட்படுத்தி அவற்றை சாலையின் ஓரப்பகுதியில் அமைக்க வேண்டும், இந்தப்பகுதிகளில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி இன்று வரை முடிவடையவில்லை. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பணியை தொடங்க வேண்டும், கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி கழிவறை கட்ட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.