பள்ளி அருகே ரேஷன் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு; வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
பள்ளி அருகில் அமையுள்ள ரேசன் கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 330 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளிக்கு அருகே ரேசன் கடை அமைக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பள்ளி அருகே இந்த ரேஷன் கடை திறக்கப்பட்டால் கூட்டமும், இறைச்சலும் ஏற்பட்டு மாணவர்களின் கற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கு விளையாட இடவசதி இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் ரேசன் கடை திறக்கப்பட்டால், மாணவர்கள் இடவசதி இல்லாமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை உள்ளது.
எனவே பள்ளி வளாகத்தின் அருகே அமைய உள்ள ரேசன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கடம்பத்தூர் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் சுதாகர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் பள்ளி அருகில் அமையுள்ள ரேசன் கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என புகார் மனு அளித்தார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.