வெள்ளாளபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
வெள்ளாளபுரம் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி,
ஆக்கிரமிப்பு குடியிருப்புகள்
கொங்கணாபுரம் அடுத்துள்ள வெள்ளாளபுரம் கிராமத்தில் உள்ள ஏரியானது சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் இருந்து உபரி நீர் சுமார் 8 கிராமங்கள் வழியாகச் சென்று எடப்பாடி சரபங்கா நதியை அடைகிறது. இதனிடையே இந்த ஏரியின் ஓரமாக சுமார் 106 குடும்பத்தினர் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆக்கிரமிப்புகளை காலி செய்யக்கோரி பலமுறை அரசு அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் அப்பகுதி பொதுமக்கள் ஆக்கிரமிப்பை காலி செய்யாமல் அங்கேயே குடியிருந்து வந்தனர்.
பொதுமக்கள் வாக்குவாதம்
இந்நிலையில் நேற்று எடப்பாடி தாசில்தார் லெனின், சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், மண்டல துணை தாசில்தார் மகேந்திரன், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய வந்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் இரண்டு வீடுகள் இடிக்கப்பட்டன.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்ய வந்த அரசு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் மற்றும் மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கூறினர். பொதுமக்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வார கால அவகாசம் கொடுப்பதாகவும், அதற்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.