செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 8 Nov 2022 1:00 AM IST (Updated: 8 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டையாம்பட்டியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

சேலம்

ஆட்டையாம்பட்டியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க வந்திருப்பதாக அங்கிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூறியதாவது:-

ஆட்டையாம்பட்டியில் மாரி வீதி, மூவேந்தர் வீதி மற்றும் திருமலை வீதியை உள்ளடக்கிய 13-வது வார்டில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. குடியிருப்புக்கு அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தனியார் ஆஸ்பத்திரி அமைந்துள்ளது. ஆனால் நாங்கள் வசிக்கும் மையப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

செல்போன் கோபுரம்

செல்போன் கோபுரம் கதிர்வீச்சின் காரணமாக குழந்தையின்மை, புற்றுநோய், தொழுநோய் ஏற்படும் என்று மக்கள் மத்தியில் தகவல் பரவி இருக்கிறது. ஊர் பொதுமக்கள் அனைவரும் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறி அந்த இடத்தில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செல்போன் கோபுரம் அமைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

--


Next Story