செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
முத்துப்பேட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2-வது முறையாக பணிகள் நிறுத்தப்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 2-வது முறையாக பணிகள் நிறுத்தப்பட்டது.
செல்போன் கோபுரம்
முத்துப்பேட்டை தெற்கு தெருவில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஒரு தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் முறையான அனுமதி பெற்று மீண்டும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது.
சாலை மறியல் முயற்சி
இந்த நிலையில் தனியார் செல்போன் நிறுவனம் முறைப்படி கலெக்டரிடம் அனுமதி பெற்று போலீசார் பாதுகாப்புடன் நேற்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கினர். மேலும் கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களையும் கொண்டு வந்து இறக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி ெபாதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2-வது முறையாக பணி நிறுத்தம்
அப்போது நாங்கள் நீதிமன்றம் செல்ல கால அவகாசம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு 2 நாள் அவகாசம் தருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பணி 2-வது முறையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.