செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செல்போன் கோபுரத்துக்கு எதிர்ப்பு

நாகர்கோவில் மேலப்பெருவிளை பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பிறகு செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணி நேற்று காலை நடந்தது. இதனை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் தங்களுடைய முடிவில் உறுதியாக இருந்தனர்.

கஞ்சி காய்ச்சும் போராட்டம்

பின்னர் மாலையில் மக்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மற்றும் பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜய் வசந்த் எம்.பி. பேசுகையில், மேலபெருவிளை பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணி கடந்த ஓராண்டுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்படும்.

சட்ட ரீதியாக...

எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நாம் அதனை சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டும். அதன்படி நாமும் போராட்டங்களில் ஈடுபடாமல் சட்டரீதியாக கலெக்டரிடம் மனு அளிப்போம்" என்றார்.

இதற்கிடையே பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக பேசினார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

முன்னதாக இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் நேற்று காலையில் மனு கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story